Saturday, September 29, 2012

Cosmic Calendar


நாம் வாழும் உலகம் உட்பட இப்பிரபஞ்சம் தோன்றி இன்றுவரை 13,7 பில்லியன் ஆண்டுகளாகின்றன என வானியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பலகோடி ஆண்டுகளாக நிலைத்திருக்கும் இப்பிபஞ்சத்தின் வரலாற்றைச் சுருக்கமாக அறியும் பொருட்டு, கார்ல் சாகன் ஓர் ஆண்டுக் குறியீட்டு முறையை வகுத்தார். இம்முறையில் 13.7 பில்லியன் ஆண்டுகளை ஓர் ஆண்டாகச் சுருக்கிவிட்டார். இவர் பயன்படுத்திய அளவுகோளின்படி 24 நாட்கள் ஒரு பில்லியன் ஆண்டையும், ஒரு வினாடி 475 ஆண்டுகளையும் குறிக்கின்றன.

பிபஞ்சத்தின் வரலாற்றை ஓர் ஆண்டுக்குள் சுருக்கிய இத்திட்டத்தில் ஜனவரி 1 ஆம் நாள் பிரபஞ்சம் தோன்றியதாகவும், மே 1 ஆம் நாள் வான்கங்கை தோன்றியதாகவும், செப்டம்பர் 25 ஆம் நாள் முதல் உயிரினம் தோன்றியதாகவும், டிசம்பர் 31 ஆம் நாள் இரவு 10.30 மணிக்கு முதல் மனிதன் தோன்றியதாகவும் சாகன் குறிப்பிடுகின்றார். இறுதி 90 நிமிடங்கள் மாத்திரமே மனித குலத்தின் காலமாகும்.

நன்றி : பண்பாட்டு மானிடவியல்

http://en.wikipedia.org/wiki/Cosmic_Calendar




Sunday, July 29, 2012

அதிகாரம் : வரலாறும் பகிர்வும்


அதிகாரத்தின் வரலாறு.
1. குடும்ப அமைப்பு மற்றும் குழுக்களிடையே அதிகாரம்.
2. நிலப்பிரபுத்துவகால அதிகாரம். (மன்னராட்சி மூலமான மத நிறுவனங்களின் அதிகாரம்)
3. அரசு என்ற எண்ணக்கருவும் அதிகாரமும்.
4. தேசிய இனங்களை மையப்படுத்திய அரசும் அதிகாரமும்.
5. பூர்த்தியடையாத தேசிய அபிலாசைகளும் அதிகாரப் பரவலாக்கமும்
அரசுகளை மையப்படுத்திய அதிகாரப் பரவலாக்கல் என்னும் எண்ணக்கரு
1. தேசிய இனங்களை மையப்படுத்திய அதிகாரப் பரவலாக்கல்.
2. பின்காலனித்துவ காலப்பகுதி – அரசு – அதிகாரப் பரவலாக்கல்
3. பிரதேச அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கல்
4. குடியுரிமையும் அதிகாரப் பரவலாக்கமும்
5. அடையாள அரசியலும் அதிகாரப் பரவலாக்கலும்
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல்.
1. இலங்கை அரசியலில் அதிகாரத்தின் வரலாறு.
2. அதிகாரப் பகிர்வுக்கான கதையாடல்கள்
3. அதிகாரத்தைக் கையகப்படுத்தும் நோக்கிலான போராட்டம்
4. திம்பு உடன்படிக்கை, 13 அம் சட்டச் சீர்திருத்தம், சந்திரிக்காவின் தீர்வுப்பொதி, இடைக்கால நிர்வாக சபை மற்றும் சமஸ்டி பற்றிய உரையாடல்கள்
5. இலங்கையின் இன்றைய அதிகார வரைபடம்
எவ்வாறான தீர்வு பொருத்தமாக இருக்க முடியும்/கூடும்
1. நவீன இறைமைக் கோட்பாடும் தீர்வும்
2. தென்னாசியப் பிராந்தியத்தில் காணப்படும் அதிகாரப் பரவலாக்கம்
3. இந்திய மேலாதிக்கமும் 13 ஆம் சட்டக் கோவையும்
4. பின் – அடையாள அரசியல் காலமும் அதிகாரப் பரவலாக்கலும்
5. குடியுரிமை, மனித உரிமைகள், குழு அடையாளம், பால் சார்ந்த அடையாளங்கள் மற்றும் இனத்துவ ரீதியிலான அதிகார வரைபடம்.
மார்க்சிய நோக்கிலான அதிகார வரைபடம், மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் அதிகாரச் சமன்பாடு.

Thursday, July 5, 2012

அன்னிய நிதி


அன்னிய நிதி தொடர்பான உரையாடல்கள் சரியான புள்ளியை நோக்கிப் போகவில்லை. ஜெயமோகனால் உருவாக்கபப்ட்ட அருமையான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. மரபார்ந்த இடதுசாரிகள் கொண்டிருந்த 'அன்னியநிதி' தொடர்பான கூற்றுக்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. அவர்களது ஒட்டுமொத்த நிராகரிப்பு என்ற போக்கு சமூகத்தில் எடுபடாமல் போனதோடு ஆபத்தான / ஆபத்தற்ற நிதி மூலங்கள் என்ற வேறுபாடுகளைக் கூடச் சுட்டிக்காட்டத் தவறியுள்ளன. அவ்வாறே அன்னிய நிதி தொடர்பான விமர்சனமற்ற வாதங்களும் ஆபத்தானவையே. 

நிதி மூலங்களை வேறுபடுத்தி அறிவது மிக முக்கியமானது. நேரடி உளவுப்பணிகள், கருத்தியல் உருவாக்கங்கள், மனிதாபிமானப் பணிகள், கல்விப் பணிகள் என்ற வெவ்வேறு துறைகளில் இந்நிதி இயங்குகின்றது. இவற்றை வேறுபடுத்தாமல் ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டோ அல்லது விமர்சனமற்று ஏற்றுக் கொண்டுவிட்டோ போக முடியாது.

உதாரணமாக நான் தொடர்புபட்டுள்ள Knowledge preservation தொடர்பான செயற்பாடுகளில் மிக முக்கியமாக 3 விடயங்களைப் பார்க்க முடியும்.
* செயற்பாட்டின் வெளிப்படைத்தன்மை ( Transparency )
* வெளிப்பாடுகளின் திறந்த அணுக்கம் ( Open Access )
* அறிவு மீளுருவாக்கத்திற்கான அனுமதி ( Creative Common Licence )
மேற்படி மூன்று விடயங்களையும் மக்கள் நலன் சார்ந்து பொருத்திப் பார்த்தால் போதுமானது என நம்புகின்றேன்.

இவ்வாறு சகல துறைகளும் அன்னிய நிதிக் கையாளுகை தொடர்பான மக்கள் நலன் சார்ந்த சட்டகத்தை உருவாக்கும் போது அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைக் குறைக்க முடியும் என நம்புகின்றேன். ஜெயமோகனுடைய 'பொதுமைப்படுத்தல்களும்' சுகுணா திவாகரின் 'தொட்டனைத்தூறும்' கட்டுரைகளும் அன்னிய நிதிய நிதியை எதிர்கொள்ள அல்லது அன்னிய நிதியின் பாதங்களை எதிர்கொள்ள சரியான சட்டகங்களை அமைப்பதற்கு உதவாது என்று நம்புகின்றேன்.

இந்துத்துவம் எதிர் சிறுதெய்வ வழிபாடு


@Rajan Kurai : காலம்தோறும் மாறிவரும் ஜாதிகளின் சமூகப்பாத்திரத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை தொடர்ந்து மறுபரிசீலனை செய்வதே சிந்தனைகளுக்கு முக்கியமானதாகும். "ஜாதியின் குறியியக்கம்" என்ற என்னுடைய கட்டுரை அந்த நோக்கில் எழுதப்பட்டதுதான். எனவே ஜாதியை காரணம் காட்டி நமது பண்பாட்டின் பல்வேறு அம்சங்களிலிருந்து நாம் துண்டித்துக்கொள்ள முடியாது. இதெல்லாம் குறித்து நாம் நிறைய விவாதிக்கலாம்; தொடர்ந்து ஆய்வுச்செயல்பாடுகள்,கோட்பாட்டாங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

@Gnani Sankaran : ராஜன் குறை , பண்பாட்டின் அம்சங்களை ஜாதியிடமிருந்து துண்டிப்பது எப்படி என்பதுதான் அராவும் நானும் முன்வைக்கும் முக்கியக் கேள்வி. அது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடப்பது ஆரோக்கியமான போக்கேயாகும்.

மேற்படி உரையாடலில் கவனத்தை ஈர்த்த விடயங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். இப்புள்ளியை மையப்படுத்திய உரையாடல்கள் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிய ஆவல். மேலும், துறை சார்ந்த முன்னேற்றத்திற்கப்பால் அவை அரசியல் தளத்திற்கு கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏதாவது உள்ளதா?

பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும் : http://tinyurl.com/d62x4g5
நிறுவனமயப்பட்ட இந்துத்துவத்தையும் சிறுதெய்வ வழிபாட்டு மரபுகளையும் வேறுபடுத்தும் செயற்பாடுகளை தொ. பரசிவன் அவர்கள் சரியாகச் செய்துள்ள போதிலும் பெரியாரும் அதையே வலியுறுத்தினார் என்பதற்கான சரியான ஆதாரங்களைத் தரவில்லை என்று நம்புகின்றேன். அல்லது, நிறுவனமயப்பட்ட இந்துத்துவத்திற்கு எதிரான பெரியாருடைய நிலைப்பாட்டை பரமசிவன் அவர்களே தனது நிலைப்பாட்டிற்கு நீட்டி வளர்த்துச் செல்கின்றாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

Thursday, March 8, 2012

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்



புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான கணேசன் ஐயர் எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' இப்போது நூலுருவில் படித்து முடித்தேன். இனம்புரியாத சோகம் மனசை அப்பிக் கொண்டுள்ளது. பத்தாவது வயதில் 'புதியதோர் உலகம்' ஐ வாசித்து முடித்து என்ன உணர்விற்கு ஆட்பட்டேனோ - எவ்வாறு துவண்டு போனேனோ - அண்ணளவாக 20 வருடங்களின் பின்னர் 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' படித்து முடித்ததும், அதே உணர்வு - அதே ஆற்றாமை தான் எஞ்சியுள்ளது.

இடையில் மடித்துக் கட்டப்பட்ட சாரமும், பெரும்பாலான பட்டன்களைத் திறந்து விட்டபடியான தோரணையும், தலைநிறைந்த கலைந்த கேசமும் சேர்ந்து உருவாக்கிய சிறுவயதுக் கதாநாயக படிமங்கள் - சிறுவயது முதல் தேடியலைந்த கதாநாயகர்கள் தோல்வியால் துவண்டு போவதை மீண்டும் ஒருமுறை பார்க்க நேரிட்டது வருத்தமாயிருக்கின்றது. எல்லா கதாநாயகர்களும் ஏதோவொரு காரணத்தால் கதாநாயகிகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

http://inioru.com/?p=26525

Monday, February 6, 2012

தேசியவாதம் : உரையாடல்

தேசியவாதம் சார்ந்த புள்ளிகளில் நடராஜா குருபரனது ஃபேஸ்புக் இல் தெரிவித்த சில கருத்துக்களை இவ்விடத்தில் பகிர்கின்றேன்.

தேசியவாதம் சார்ந்த புள்ளிகளில் உரையாடல்கள் நடைபெற்றதைப் பார்த்தேன். தேசியவாதம் தொடர்பான உரையாடல்கள் மீண்டும் பரந்தளவில் நடைபெற வேண்டும். பின் - நவீன கால சிந்தனைகளின் பின்பான தேசியவாதக் கதையாடல்கள் நிச்சயமாக பழையவற்றின் தொடர்ச்சியாக மாத்திரம் அமையாது. புதிய பாதைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். தலித்திய செயற்பாட்டாளர் anand teltumbde ஈழத்து தமிழ்த்தேசியவாதம் தொடர்பான சில முக்கியமான விடயங்களைக் கூறியிருந்தார். அந்நேர்காணலை எடுக்க முடியவில்லை. இலங்கை தமிழ்த்தேசியவாத்தையும் - தமிழ்நாட்டுத் தமிழ்த்தேசியவாத்தையும் வேறுபடுத்தி அணுக முற்பட்டிருந்தார். ஈழத்து தமிழ்த்தேசியவாத்தின் இருப்பை அவர் கேள்விக்கு உட்படுத்தவில்லை.

பின் - காலனிய நாடுகளின் தேசியவாத அடையாளச் சிக்கல்களை நாம் நிச்சயமாக மேற்கத்தைய அணுகுமுறையில் இருந்து வேறுபடுத்தி அணுக வேண்டியுள்ளது. தேசியவாத அடையாளச் சிக்கல்கள் 'அங்கீகாரம்' மற்றும் 'இறையாண்மை' ஆகிய புள்ளிகளுக்குள் அல்லாடுபவை. பூரணமான அடைவில்லாவிட்டாலும், ஓரளவான அடைவுகளுடன் தேசியவாதச் சிந்தனைகள் ஓய்வுக்கு வந்துவிடும். அவற்றின் ஓய்வு தேசியவாதப் பரப்பிற்குள் வரும் விளிம்புநிலை அடையாள அரசியல்கள் முன்னரங்கிற்கு வருவதை உறுதி செய்யும்.

இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியவாத்தையும் அதன் நியாயத்தையும் ஏற்றுக் கொள்வது அவசியமானது. தமிழ்த்தேசியவாத்தை மாத்திரமல்லாது முஸ்லிம், மலையக தேசியவாதங்களை ஏற்றுக் கொள்வது அவசியமானது. ஏன், சிங்கள தேசியவாத்தையும் கூட ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான தீர்வு சாத்தியாகிய அடுத்த கணம் அடையாள அரசியல்களுக்கான யுகம் வீறுகொண்டெழும். தேசியவாதச் சிந்தனைகள் விளிம்புநிலைக் கதையாடல்களுக்கு மிகப்பெரிய தடையான கணியங்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியமானது. இதர தேசியவாதங்களை மறுத்துக் கொண்டிருப்பது சகல தேசிய இனங்களுக்குள்ளும் ஒடுக்கப்பட்டிருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இரண்டு தேசிய அடையாளச் சிக்கல்களுக்குள் மாட்டுப்பட்டிருக்கும் சமூகங்கள், தங்கள் பரப்பில் உள்ள விளிம்புநிலைச் சமூகங்களை கவனிக்காது - ஏமாற்றும் என்ற உண்மையில் இருந்து நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில், மொழி ரீதியான மாநிலங்கள் என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமல் போயிருக்குமேயானால், இன்று தலித்திய அரசியல் இவ்வளவு வீரியத்துடன் இருக்காது. தலித்திய புலமைத்துவச் செயற்பாடுகள் ஈழத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பல மடங்கு வீரியமானவை. தமிழ்ச்சூழலின், சாதிய போராட்டங்களுக்கு முன்னோடியான ஈழத்தவர்கள் ஏன் இவ்வளவுதூரம் பின்தங்கியிருக்கின்றோம் என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத தருணமிது. (புலிகள் மீது குற்றம்சாட்டிவிட்டு ஒதுங்குவதில் அர்த்தமில்லை. [ http://www.shaseevanweblog.blogspot.com/2011/12/blog-post_09.html ] ) தொடர்ச்சியான தேசியவாதப் பிண்ணக்குகள் - மேல்தட்டு வர்க்க மக்களும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக சகலரது தலையிலும் மிளகாய் அரைக்கப்போவதையே எதிர்வு கூறுகின்றது.

எனது கருத்தை, அடையாள அரசியல் மீது அக்கறையற்றவர்களது கூற்றாகப் பார்க்க முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். வர்க்கப் புரட்சிக்குப் பின்னர்தான் அடையாள அரசியல் என்றோ அல்லது தமிழீழத்திற்குப் பின்புதான் தலித்தியம் என்றோ கூற வரவில்லை என்பதை திட்டவட்டமாக வலியுறுத்த விரும்புகின்றேன். கற்காலத்தில் இருந்து முதலீட்டிய சமூகத்தின் பிரதிநிதிகளாக செயற்படும் மேறக்த்தைய அரசுகள் என்ற அரசுக்குரிய பாத்திரம்வரையான வளர்ச்சியில் முக்கிய படிநிலைகளை அடையாளம் கண்டுகொள்பவர்கள் - நான் கூற வருவது முற்றுமுழுதாக வேறானது என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

மேலதிக வாசிப்பிற்கு : http://tinyurl.com/6ngvo88

தேசியவாதம் : உரையாடல்

தேசியவாதம் சார்ந்த புள்ளிகளில் நடராஜா குருபரனது ஃபேஸ்புக் இல் தெரிவித்த சில கருத்துக்களை இவ்விடத்தில் பகிர்கின்றேன்.

தேசியவாதம் சார்ந்த புள்ளிகளில் உரையாடல்கள் நடைபெற்றதைப் பார்த்தேன். தேசியவாதம் தொடர்பான உரையாடல்கள் மீண்டும் பரந்தளவில் நடைபெற வேண்டும். பின் - நவீன கால சிந்தனைகளின் பின்பான தேசியவாதக் கதையாடல்கள் நிச்சயமாக பழையவற்றின் தொடர்ச்சியாக மாத்திரம் அமையாது. புதிய பாதைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். தலித்திய செயற்பாட்டாளர் anand teltumbde ஈழத்து தமிழ்த்தேசியவாதம் தொடர்பான சில முக்கியமான விடயங்களைக் கூறியிருந்தார். அந்நேர்காணலை எடுக்க முடியவில்லை. இலங்கை தமிழ்த்தேசியவாத்தையும் - தமிழ்நாட்டுத் தமிழ்த்தேசியவாத்தையும் வேறுபடுத்தி அணுக முற்பட்டிருந்தார். ஈழத்து தமிழ்த்தேசியவாத்தின் இருப்பை அவர் கேள்விக்கு உட்படுத்தவில்லை.

பின் - காலனிய நாடுகளின் தேசியவாத அடையாளச் சிக்கல்களை நாம் நிச்சயமாக மேற்கத்தைய அணுகுமுறையில் இருந்து வேறுபடுத்தி அணுக வேண்டியுள்ளது. தேசியவாத அடையாளச் சிக்கல்கள் 'அங்கீகாரம்' மற்றும் 'இறையாண்மை' ஆகிய புள்ளிகளுக்குள் அல்லாடுபவை. பூரணமான அடைவில்லாவிட்டாலும், ஓரளவான அடைவுகளுடன் தேசியவாதச் சிந்தனைகள் ஓய்வுக்கு வந்துவிடும். அவற்றின் ஓய்வு தேசியவாதப் பரப்பிற்குள் வரும் விளிம்புநிலை அடையாள அரசியல்கள் முன்னரங்கிற்கு வருவதை உறுதி செய்யும்.

இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியவாத்தையும் அதன் நியாயத்தையும் ஏற்றுக் கொள்வது அவசியமானது. தமிழ்த்தேசியவாத்தை மாத்திரமல்லாது முஸ்லிம், மலையக தேசியவாதங்களை ஏற்றுக் கொள்வது அவசியமானது. ஏன், சிங்கள தேசியவாத்தையும் கூட ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான தீர்வு சாத்தியாகிய அடுத்த கணம் அடையாள அரசியல்களுக்கான யுகம் வீறுகொண்டெழும். தேசியவாதச் சிந்தனைகள் விளிம்புநிலைக் கதையாடல்களுக்கு மிகப்பெரிய தடையான கணியங்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியமானது. இதர தேசியவாதங்களை மறுத்துக் கொண்டிருப்பது சகல தேசிய இனங்களுக்குள்ளும் ஒடுக்கப்பட்டிருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இரண்டு தேசிய அடையாளச் சிக்கல்களுக்குள் மாட்டுப்பட்டிருக்கும் சமூகங்கள், தங்கள் பரப்பில் உள்ள விளிம்புநிலைச் சமூகங்களை கவனிக்காது - ஏமாற்றும் என்ற உண்மையில் இருந்து நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில், மொழி ரீதியான மாநிலங்கள் என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமல் போயிருக்குமேயானால், இன்று தலித்திய அரசியல் இவ்வளவு வீரியத்துடன் இருக்காது. தலித்திய புலமைத்துவச் செயற்பாடுகள் ஈழத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பல மடங்கு வீரியமானவை. தமிழ்ச்சூழலின், சாதிய போராட்டங்களுக்கு முன்னோடியான ஈழத்தவர்கள் ஏன் இவ்வளவுதூரம் பின்தங்கியிருக்கின்றோம் என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத தருணமிது. (புலிகள் மீது குற்றம்சாட்டிவிட்டு ஒதுங்குவதில் அர்த்தமில்லை. [ http://www.shaseevanweblog.blogspot.com/2011/12/blog-post_09.html ] ) தொடர்ச்சியான தேசியவாதப் பிண்ணக்குகள் - மேல்தட்டு வர்க்க மக்களும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக சகலரது தலையிலும் மிளகாய் அரைக்கப்போவதையே எதிர்வு கூறுகின்றது.

எனது கருத்தை, அடையாள அரசியல் மீது அக்கறையற்றவர்களது கூற்றாகப் பார்க்க முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். வர்க்கப் புரட்சிக்குப் பின்னர்தான் அடையாள அரசியல் என்றோ அல்லது தமிழீழத்திற்குப் பின்புதான் தலித்தியம் என்றோ கூற வரவில்லை என்பதை திட்டவட்டமாக வலியுறுத்த விரும்புகின்றேன். கற்காலத்தில் இருந்து முதலீட்டிய சமூகத்தின் பிரதிநிதிகளாக செயற்படும் மேறக்த்தைய அரசுகள் என்ற அரசுக்குரிய பாத்திரம்வரையான வளர்ச்சியில் முக்கிய படிநிலைகளை அடையாளம் கண்டுகொள்பவர்கள் - நான் கூற வருவது முற்றுமுழுதாக வேறானது என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

மேலதிக வாசிப்பிற்கு : http://tinyurl.com/6ngvo88

Thursday, January 26, 2012

Preservation : Anthropological perspective


இவ்வாவணத்தை விரிவாக்கி உதவுங்கள்.

Document, preserve and digitally archive ethnography and knowledge bases such as dialects, belief systems, myths, rituals, folklore, games, indigenous medicine, law and administrative systems, technologies and arts of mainstream and marginalized communities.

இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களது வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தல். சடங்குகளை ஆவணப்படுத்துவதோடு குறித்த சடங்குகளின் தொன்மை, காலப்போக்கில் அவற்றில் நிகழ்ந்த மாற்றங்கள், சடங்குகள் தொடர்பான முதியவர்களின் கருத்துக்கள், சமூகத்தின் கட்டமைப்பு சார்ந்து - அதன் வெவ்வேறு சாதிகளில் குறித்த சடங்குகளில் காணப்படும் வேறுபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இவ்வாவணப்படுத்தல் அமைய வேண்டியுள்ளது. மத வேறுபாடுகள் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கணியமாகும். ஒளி, ஒலி மற்றும் படங்களைக் கொண்டதாக இவ்வாணப்படுத்தல் செயற்பாடுகள் அமையும்.

1.
'இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த மனிதர்களது வாழ்க்கைச் சக்கரத்தில் தொடர்புறும் சடங்குகளை ஆவணப்படுத்தல்.'
வாழ்க்கைச்சகரத்தில் ஒருவர் சந்திக்க நேரும் பல்வேறுபட்ட சடங்குகளை அடையாளம் கண்டு அவற்றை ஆவணப்படுத்தல்.

# பிறப்பு சார்ந்த சடங்குகள் : துடக்குக் கழித்தல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், சோறு தீத்துதல், ஏடு தொடக்குதல்.

# பருவமடைதல் சார்ந்த சடங்குகள்.

# திருமணம் சார்ந்த சடங்குகள் : பெண்பார்த்தல், பொன்னுருக்கு, நாலாஞ்சடங்கு

# இறப்பு சார்ந்த சடங்குகள் : எட்டுச்செலவு, அந்தியேட்டி, ஆட்டுத்திவசம்


2.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த கலை வெளிப்பாட்டு பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல்'

உலகமயமாதல் மற்றும் புலப்பெயர்வு - போர் ஆகிய காரணங்களால் தமிழர்களது மரபார்ந்த பல கலைவெளிப்பாடுகள் அழிந்துவருகின்றது. உதாரணமாக கூத்து என்ற தொன்மையான கலை வெளிப்பாட்டைக் குறிப்பிடலாம். கூத்து கலையுடன் தொடர்புபட்ட பலர் இன்று அச்செயற்பாடுகளிலிருந்து வெளியேறுவதையும் - குறித்த கலையுடன் தொடர்புடையவர்கள் , நிகழ்த்து கலைஞர்கள் இறந்து வருவதையும் கண்கூடாகக் காண்கின்றோம். வடக்கு கிழக்கில் பிரதேசம் சார்ந்த வேறுபாட்டுடன் கூத்து நிகழ்த்தப்பட்டது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூத்தை அதன் நிகழ்த்துகையுடன் சேர்த்து - கூத்து கலைஞர்களது பேட்டிகளுடன் அவற்றை முற்றுமுழுதாக ஆவணப்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கூத்து என்ற கலைவெளிப்பாட்டுடன் இதர தமிழர்களது நிகழ்த்துகலை வெளிப்பாடுகளையும் ஒப்பிட்டு நோக்கி ஆவணப்படுத்துவது இச்செயற்றிட்டத்தின் மூலமே முன்னெடுக்க வேண்டிய பணியாகின்றது.
# கூத்து
# நாட்டார் பாடல்கள்


3.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களுடன் தொடர்புள்ள சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் ஆவணப்படுத்தல்'

இலங்கையில் உள்ள சமூகங்களைப் பொறுத்தவரை பல்வேறு வித்தியாசங்களையுடைய சமூகக் கட்டமைப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரதேசம் சார்ந்தும் சாதிக்கட்டமைப்பு சார்ந்தும் வழிபாட்டு முறைகள் சிறிய வித்தியாசங்களுடன் வேறுபடுகின்றன. பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நவீனமயமாக்கல் காரணமாக அழிவுற்று வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அவற்றை ஆவணப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.


4.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களுடன் தொடர்புள்ள மருத்துவ அறிவையும் உணவுப் பழக்கவழக்கத்தையும் ஆவணப்படுத்தல்'

மேற்கத்தைய மருத்துவத்தின் காரணமாகவும் நவீனமயமாக்கல் காரணமாகவும் தமிழ்பேசும் சமூகங்கள் தமது மருத்துவ அறிவுத் தொடர்ச்சியையும் உணவுப் பழக்கவழக்கங்களது தனித்துவத்தையும் இழந்து வருகின்றனர். இனத்துவ அறிவுத் தொடர்ச்சி என்ற வகையும் குறித்த சமூகம் நூற்றுக்கணகான வருடங்களாகத் தெரிவு செய்து தொடர்ந்து வந்த அறிவுத்தொடர்ச்சியையும் - அழிந்து கொண்டிருக்கும் அறிவு மற்றும் பழக்கவழக்கங்கள் என்ற வகையில் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. சித்த மருத்துவம், நாட்டு வைத்தியம் போன்றவற்றை, அவற்றுடன் தொடர்புள்ள மருந்துகள் , மூலிகைகளையும் ஆவணப்படுத்துவது இச்செயற்றிட்டத்தின் மூலம் செய்ய வேண்டியது.


5.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த தொழிற்கலைகளை ஆவணப்படுத்தல்'

இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த அழிந்துவரும் தொழிற்கலைகளை அடையாளம் கண்டு அவற்றை ஆவணப்படுத்துவது முக்கியமானது. வேளாண்மை, மரம் வெட்டுதல், தச்சு வேலைகள், உலோகப் பாத்திரங்கள் செய்தல், தையல் வேலைப்பாடுகள் போன்றவற்றை அவற்றின் தொன்மைகள் , பழமையான முறைகள் போன்ற தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.


6.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த பாரம்பரிய விளையாட்டுக்களை ஆவணப்படுத்தல்'

கபடி, பேணிப்பந்து, பட்டம் ஏற்றுதல், கிளித்தட்டு, கிட்டிப்புல்லு, சொக்கட்டான் போன்ற அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரிய விளையாட்டுக்களை ஆவணப்படுத்துவது தமிழ்பேசும் சமூகங்களது தொன்மையான வாழ்வுத் தொடர்ச்சியை நிறுவுவதற்கான முக்கியமான ஆதாரங்களாகும். மேற்படி விளையாட்டுக்களை அடையாளம் கண்டு அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் கருத்தில் கொண்டு ஆவணப்படுத்த வேண்டிய மிக முக்கிய பணியாக அமைகின்றது.


7.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த பிரதேசங்கள் மற்றும் மனிதர்களது வரலாறுகளை வாய்மொழிமூலமாக ஆவணப்படுத்தல்'

இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் சார்ந்த பிரதேசங்கள் மற்றும் மனிதர்களது வரலாறுகள் வெறும் வாய்மொழிமூலமாகவே கதைகளாகச் சொல்லப்பட்டு வருகின்றது. கதைகளுக்கு ஆதாரமான தகவல் மூலங்களை ஆவணப்படுத்தி முறையான வரலாறுகளை எழுதும் முயற்சிகள் பெரும்பாலும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன. எழுத்துவன்மை உள்ளவர்களால் மாத்திரம் சில கதைகள் புனைவுகளாகவும் அ-புனைவுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நிறைய போதாமைகள் உண்டு. எமது மிக முக்கியமான செயற்பாடுகளாக அமைய வேண்டியது ஏற்கனவேயான போதாமைகளை இனங்கண்டு ஏராளமான தகவல் ஆதாரங்களை பதிவு செய்வதுதான்.

Saturday, January 7, 2012

பாசமலர்


பாசமலர் படத்தை பார்த்து பலர் அழுததை கதை கதையாகக் கேட்டிருக்கின்றேன். ஆயினும், பாசமலரைப் பார்த்த போது எனக்கு மட்டு அழுகை வரவில்லை. இந்த இறுமாப்பில் இருந்த எனக்கு இடி விழுந்த கதையை பகிராவிட்டால் மண்டையே வெடித்துவிடும் போலுள்ளது.

மாமல்லனின் பதிவில் ( இடுகுறியும் குறியீடும் தற்குறியும் ) சோபாசக்தியின் தங்கை தர்மினிக்கும் மாமல்லனுக்கும் நடந்த உரையாடலைப் பார்த்து பாசமலர் படத்துக்கே அழதா எனக்கு அழுகை வந்துவிட்டது. நீண்டநேர அழுகையின் பின்னர் இந்தப்பதிவை எழுதுகின்றேன். இவ்வாறானதொரு ரத்தமும் சதையுமான உண்மைக் கதையைப் போய் நான் சந்தேகப்பட்டு விட்டேன் என்று நினைக்கும் போது உடலெல்லாம் பதறுகின்றது. 7 ஜென்மம் எடுத்தாலும் எனது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடியாது போலுள்ளதே..!!!


Tharmi Ni

எனக்கு (கப்டன்) இதைப் படித்ததிலிருந்து அப்பாவின் ஞாபகம். கவலை. பொலிஸ், புளொட், ஊராட்கள், நேவி, புலி என அடிவாங்கி உளவியல் தாக்கமுடையவராக இப்பவும் இந்தியாவிலிருக்கிறார். 6 மாதம் புலிகள் கொண்டு வைச்சிருந்து அடிச்சு விட்டாப் பிறகு அந்தக் கோபமெல்லாம் அடியாக எனக்கும் அம்மாவுக்கும் தான் விழுந்தது. உண்மையாகவே என் சங்கிலி வாங்கிக் கொண்டு ஒரு பானையில் சோறுடன் இந்தியா போறதாக வெளிக்கிட்டார். நாம் நம்பவில்லை. 13, 19 வயது பிள்ளைகள் அகதிகளாக படகில் இந்தியா போனது கவலை. ஒரே குடி. கோட்டை நோக்கி வந்த ஆமி பிடித்து 5 நாட்களாக வைத்திருந்து விடுவிக்கப்பட்டவர்களவர்கள் .படகில் வேட்டி கட்டி நெடுந்தீவடைந்து நயினாதீவு போய் பிறகு நேவியிடம் உளவாளி என அடிவாங்கி.புலிகளிடமும் நேவியின் உளவாளி என அடிவாங்கி (அப்ப 53 வயசு) புலிகளின் 6 மாத சிறைக்கு பிறகு வந்தும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் பயப்பிடுவார். இப்பவும் யாழ்ப்பாணம் போக விருப்பமில்லை. இந்தியாவில் சுதந்திரமாக இருக்கிறதாக சொல்வார். இது உண்மை. தனிப்பட உங்களுக்கு எழுதுகிறேன். நம்பகத்தன்மை பற்றிய உங்கள் கணிப்பு சரியெனச் சொல்ல இதை எழுதுகிறேன். இது அண்ணன் எழுதிய கதை. ஆகவே சாட்சியாயிருக்கும் நான் அமைதியாக கருத்துகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் நுழைந்து கதையை இரசிப்பவர்களை குழப்ப விரும்பவில்லை. "நான் இயக்கத்திட்ட வாங்கின அடியெல்லாம் உங்களுக்குத் தருவன்" என எனக்கும் அம்மாவுக்கும் ஒரே அடி. இவர்கள் எழுதுவதால் எம் வாழ்விலும் இது போல பல சனங்களின் வாழ்விலும் நடந்தவைகள் இல்லெயென்றாகாது. இதிலே அண்ணன் முக்கிய சம்பவங்களை வைத்து கற்பனையை சேர்த்து எழுதினார். நம்பகத்தன்மை பற்றி இன்னும் உறுதியாக நீங்கள் எழுதலாம்.

விமலாதித்த மாமல்லன்

இதை என் தளத்தில் வெளியிட தங்கள் அனுமதி கிடைக்குமா? உங்கள் பெயர் வரவேண்டாம் எனில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஈழத்துப் பெண் என்று வெளியிட விரும்புகிறேன்.

Tharmi Ni

என் பெயரை வெளியிடுவது பற்றி பிரச்சனையில்லை. பெயர் இல்லாமல் வெளியிட இது என்ன இரகசியம். அல்லைப்பிட்டியில் எல்லோருக்கும் தெரிந்த கதை நம் கதை. தனிப்பட்ட ரீதியாக உங்களுக்கு அனுப்பிய மெஸேச் இது என்றும் என் அனுமதியுடன் வெளியிடப்படுகிறதெனவும் நீங்கள் குறிப்பிடலாம். என் அண்ணா ஷோபாசக்தியுடன் இது வெளியான பிறகு நான் இன்னும் கதைக்கவில்லை. அவர் இப்ப இந்தியாவில்.

விமலாதித்த மாமல்லன்

அப்படியெனில் தாங்கள் ஷோபா சக்தியின் உடன்பிறந்த சகோதரியா?

Tharmi Ni

அவர் பிறந்து 6 வருடங்களின் பின் பிறந்தவள்.

Monday, January 2, 2012

Novel Writing Manual By Shobasakthi


கசகறணம் நாவல் தொடர்பாக வல்லினம் இதழில் சோபாசக்தி தெரிவித்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து ஏராளமான உரையாடல்கள் இணைய வெளிகளெங்கும் நடைபெற்றன. வட்டார வழக்கு மொழிப்பாவனை தொடர்பானதே சோபாசக்தியின் கருத்து என்ற கருதுகோள்களுடனேயே வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சோபாசக்தியின் தரப்பில் இருந்து நீண்ட காலமாக பதில்கள் எதுவும் வராத நிலையில், மிக அணமையில் அவ்விடயம் சார்ந்து 'கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்' என்ற பதிவின் மூலம் சோபாசக்தி தனது பக்க விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

சோபாசக்தி இவ்வளவு காலமும் மக்கள் சார்ந்து செயற்பட்டு வருபவர். ஏராளமான புனைவுகளையும், அ-புனைவுகளையும் தமிழ்ச்சூழலுக்கு கொடுத்துள்ளார். கொடுத்துக் கொண்டிருக்கின்றார். தமிழ்ச்சூழலின் தவிர்க்க முடியாத சிந்தனையாளரே சோபாசக்தி என்பதற்கு இப்பதிவு சான்றாகி நிற்கின்றது.

வட்டார வழக்கு, இலக்கியம், நாவல் என்ற பரப்புக்களில் நீண்டகாலமாக அவிழக்கபப்டாமல் இருந்த முடிச்சுக்களை சோபாசக்தி மிக எளிதாக தனது பதிவில் அவிழ்த்துச் செல்கின்றார் சோபாசக்தி. இலக்கிய பிரதிகளில் வட்டார வழக்கின் இடம் எத்தகையது அல்லது வட்டார வழக்கின் ஊடாட்டம் எந்தளவு இடம்பெறலாம் என்பதை மிக எளிதாக வரையறை செய்து செய்வது அற்புதமாக உள்ளது.

முக்கியமான இரண்டு கருத்துக்களைப் பட்டியலிடுகின்றேன்.
* மொழியின் எல்லையற்ற சாத்தியங்களை படைப்பாளி உருவாக்கிக்கொள்ளவும் தனது பிரதியூடே படைப்பாளி புதிய மொழியைக் கண்டறிந்து செல்வதற்கும் வட்டார வழக்கு தடை.
* வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால்.

சோபாவின் இப்பதிவு 'ஒரு நாவலை எப்படி எழுத வேண்டும்?' அல்லது 'ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்?' என்ற புரிதலை பலருக்கும் ஏற்படுத்திவிட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.

சோபாவின் பதிவில் 'வட்டார வழக்கு நாவலில் வரலாம். ஆனால், அதிகமாக வரக்கூடாது.' போன்ற சில முக்கியமான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை விரிவாக்கி எவ்வளவு சதவீதம் வரலாம்? அல்லது நூறு பக்க நாவலுக்குள் எத்தனை சொற்கள் வரலாம் என்பதை மிகச்சரியாகக் குறிப்பிட்டால் எதிர்காலத்தில் நாவல்களை எழுதுவோருக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அப்பதிவை இன்னமும் விரிவாக்கி 'ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்?' என்று எழுதி ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். எதிர்காலத்தில் யாராவது 'Novel Writing Manual' என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டால் ஆங்கில வாசகர்களும் அதனால் பயன் பெறுவார்கள்.

மேலதிக தகவல்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்க்ழகத்தின் வாய்மொழி மூலமான இலக்கியச் செயற்றிட்ட தளத்தைப் பார்வையிடுங்கள்.