Thursday, January 26, 2012

Preservation : Anthropological perspective


இவ்வாவணத்தை விரிவாக்கி உதவுங்கள்.

Document, preserve and digitally archive ethnography and knowledge bases such as dialects, belief systems, myths, rituals, folklore, games, indigenous medicine, law and administrative systems, technologies and arts of mainstream and marginalized communities.

இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களது வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தல். சடங்குகளை ஆவணப்படுத்துவதோடு குறித்த சடங்குகளின் தொன்மை, காலப்போக்கில் அவற்றில் நிகழ்ந்த மாற்றங்கள், சடங்குகள் தொடர்பான முதியவர்களின் கருத்துக்கள், சமூகத்தின் கட்டமைப்பு சார்ந்து - அதன் வெவ்வேறு சாதிகளில் குறித்த சடங்குகளில் காணப்படும் வேறுபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இவ்வாவணப்படுத்தல் அமைய வேண்டியுள்ளது. மத வேறுபாடுகள் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கணியமாகும். ஒளி, ஒலி மற்றும் படங்களைக் கொண்டதாக இவ்வாணப்படுத்தல் செயற்பாடுகள் அமையும்.

1.
'இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த மனிதர்களது வாழ்க்கைச் சக்கரத்தில் தொடர்புறும் சடங்குகளை ஆவணப்படுத்தல்.'
வாழ்க்கைச்சகரத்தில் ஒருவர் சந்திக்க நேரும் பல்வேறுபட்ட சடங்குகளை அடையாளம் கண்டு அவற்றை ஆவணப்படுத்தல்.

# பிறப்பு சார்ந்த சடங்குகள் : துடக்குக் கழித்தல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், சோறு தீத்துதல், ஏடு தொடக்குதல்.

# பருவமடைதல் சார்ந்த சடங்குகள்.

# திருமணம் சார்ந்த சடங்குகள் : பெண்பார்த்தல், பொன்னுருக்கு, நாலாஞ்சடங்கு

# இறப்பு சார்ந்த சடங்குகள் : எட்டுச்செலவு, அந்தியேட்டி, ஆட்டுத்திவசம்


2.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த கலை வெளிப்பாட்டு பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல்'

உலகமயமாதல் மற்றும் புலப்பெயர்வு - போர் ஆகிய காரணங்களால் தமிழர்களது மரபார்ந்த பல கலைவெளிப்பாடுகள் அழிந்துவருகின்றது. உதாரணமாக கூத்து என்ற தொன்மையான கலை வெளிப்பாட்டைக் குறிப்பிடலாம். கூத்து கலையுடன் தொடர்புபட்ட பலர் இன்று அச்செயற்பாடுகளிலிருந்து வெளியேறுவதையும் - குறித்த கலையுடன் தொடர்புடையவர்கள் , நிகழ்த்து கலைஞர்கள் இறந்து வருவதையும் கண்கூடாகக் காண்கின்றோம். வடக்கு கிழக்கில் பிரதேசம் சார்ந்த வேறுபாட்டுடன் கூத்து நிகழ்த்தப்பட்டது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூத்தை அதன் நிகழ்த்துகையுடன் சேர்த்து - கூத்து கலைஞர்களது பேட்டிகளுடன் அவற்றை முற்றுமுழுதாக ஆவணப்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கூத்து என்ற கலைவெளிப்பாட்டுடன் இதர தமிழர்களது நிகழ்த்துகலை வெளிப்பாடுகளையும் ஒப்பிட்டு நோக்கி ஆவணப்படுத்துவது இச்செயற்றிட்டத்தின் மூலமே முன்னெடுக்க வேண்டிய பணியாகின்றது.
# கூத்து
# நாட்டார் பாடல்கள்


3.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களுடன் தொடர்புள்ள சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் ஆவணப்படுத்தல்'

இலங்கையில் உள்ள சமூகங்களைப் பொறுத்தவரை பல்வேறு வித்தியாசங்களையுடைய சமூகக் கட்டமைப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரதேசம் சார்ந்தும் சாதிக்கட்டமைப்பு சார்ந்தும் வழிபாட்டு முறைகள் சிறிய வித்தியாசங்களுடன் வேறுபடுகின்றன. பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நவீனமயமாக்கல் காரணமாக அழிவுற்று வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அவற்றை ஆவணப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.


4.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களுடன் தொடர்புள்ள மருத்துவ அறிவையும் உணவுப் பழக்கவழக்கத்தையும் ஆவணப்படுத்தல்'

மேற்கத்தைய மருத்துவத்தின் காரணமாகவும் நவீனமயமாக்கல் காரணமாகவும் தமிழ்பேசும் சமூகங்கள் தமது மருத்துவ அறிவுத் தொடர்ச்சியையும் உணவுப் பழக்கவழக்கங்களது தனித்துவத்தையும் இழந்து வருகின்றனர். இனத்துவ அறிவுத் தொடர்ச்சி என்ற வகையும் குறித்த சமூகம் நூற்றுக்கணகான வருடங்களாகத் தெரிவு செய்து தொடர்ந்து வந்த அறிவுத்தொடர்ச்சியையும் - அழிந்து கொண்டிருக்கும் அறிவு மற்றும் பழக்கவழக்கங்கள் என்ற வகையில் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. சித்த மருத்துவம், நாட்டு வைத்தியம் போன்றவற்றை, அவற்றுடன் தொடர்புள்ள மருந்துகள் , மூலிகைகளையும் ஆவணப்படுத்துவது இச்செயற்றிட்டத்தின் மூலம் செய்ய வேண்டியது.


5.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த தொழிற்கலைகளை ஆவணப்படுத்தல்'

இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த அழிந்துவரும் தொழிற்கலைகளை அடையாளம் கண்டு அவற்றை ஆவணப்படுத்துவது முக்கியமானது. வேளாண்மை, மரம் வெட்டுதல், தச்சு வேலைகள், உலோகப் பாத்திரங்கள் செய்தல், தையல் வேலைப்பாடுகள் போன்றவற்றை அவற்றின் தொன்மைகள் , பழமையான முறைகள் போன்ற தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.


6.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த பாரம்பரிய விளையாட்டுக்களை ஆவணப்படுத்தல்'

கபடி, பேணிப்பந்து, பட்டம் ஏற்றுதல், கிளித்தட்டு, கிட்டிப்புல்லு, சொக்கட்டான் போன்ற அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரிய விளையாட்டுக்களை ஆவணப்படுத்துவது தமிழ்பேசும் சமூகங்களது தொன்மையான வாழ்வுத் தொடர்ச்சியை நிறுவுவதற்கான முக்கியமான ஆதாரங்களாகும். மேற்படி விளையாட்டுக்களை அடையாளம் கண்டு அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் கருத்தில் கொண்டு ஆவணப்படுத்த வேண்டிய மிக முக்கிய பணியாக அமைகின்றது.


7.
'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த பிரதேசங்கள் மற்றும் மனிதர்களது வரலாறுகளை வாய்மொழிமூலமாக ஆவணப்படுத்தல்'

இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் சார்ந்த பிரதேசங்கள் மற்றும் மனிதர்களது வரலாறுகள் வெறும் வாய்மொழிமூலமாகவே கதைகளாகச் சொல்லப்பட்டு வருகின்றது. கதைகளுக்கு ஆதாரமான தகவல் மூலங்களை ஆவணப்படுத்தி முறையான வரலாறுகளை எழுதும் முயற்சிகள் பெரும்பாலும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன. எழுத்துவன்மை உள்ளவர்களால் மாத்திரம் சில கதைகள் புனைவுகளாகவும் அ-புனைவுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நிறைய போதாமைகள் உண்டு. எமது மிக முக்கியமான செயற்பாடுகளாக அமைய வேண்டியது ஏற்கனவேயான போதாமைகளை இனங்கண்டு ஏராளமான தகவல் ஆதாரங்களை பதிவு செய்வதுதான்.

Saturday, January 7, 2012

பாசமலர்


பாசமலர் படத்தை பார்த்து பலர் அழுததை கதை கதையாகக் கேட்டிருக்கின்றேன். ஆயினும், பாசமலரைப் பார்த்த போது எனக்கு மட்டு அழுகை வரவில்லை. இந்த இறுமாப்பில் இருந்த எனக்கு இடி விழுந்த கதையை பகிராவிட்டால் மண்டையே வெடித்துவிடும் போலுள்ளது.

மாமல்லனின் பதிவில் ( இடுகுறியும் குறியீடும் தற்குறியும் ) சோபாசக்தியின் தங்கை தர்மினிக்கும் மாமல்லனுக்கும் நடந்த உரையாடலைப் பார்த்து பாசமலர் படத்துக்கே அழதா எனக்கு அழுகை வந்துவிட்டது. நீண்டநேர அழுகையின் பின்னர் இந்தப்பதிவை எழுதுகின்றேன். இவ்வாறானதொரு ரத்தமும் சதையுமான உண்மைக் கதையைப் போய் நான் சந்தேகப்பட்டு விட்டேன் என்று நினைக்கும் போது உடலெல்லாம் பதறுகின்றது. 7 ஜென்மம் எடுத்தாலும் எனது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடியாது போலுள்ளதே..!!!


Tharmi Ni

எனக்கு (கப்டன்) இதைப் படித்ததிலிருந்து அப்பாவின் ஞாபகம். கவலை. பொலிஸ், புளொட், ஊராட்கள், நேவி, புலி என அடிவாங்கி உளவியல் தாக்கமுடையவராக இப்பவும் இந்தியாவிலிருக்கிறார். 6 மாதம் புலிகள் கொண்டு வைச்சிருந்து அடிச்சு விட்டாப் பிறகு அந்தக் கோபமெல்லாம் அடியாக எனக்கும் அம்மாவுக்கும் தான் விழுந்தது. உண்மையாகவே என் சங்கிலி வாங்கிக் கொண்டு ஒரு பானையில் சோறுடன் இந்தியா போறதாக வெளிக்கிட்டார். நாம் நம்பவில்லை. 13, 19 வயது பிள்ளைகள் அகதிகளாக படகில் இந்தியா போனது கவலை. ஒரே குடி. கோட்டை நோக்கி வந்த ஆமி பிடித்து 5 நாட்களாக வைத்திருந்து விடுவிக்கப்பட்டவர்களவர்கள் .படகில் வேட்டி கட்டி நெடுந்தீவடைந்து நயினாதீவு போய் பிறகு நேவியிடம் உளவாளி என அடிவாங்கி.புலிகளிடமும் நேவியின் உளவாளி என அடிவாங்கி (அப்ப 53 வயசு) புலிகளின் 6 மாத சிறைக்கு பிறகு வந்தும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் பயப்பிடுவார். இப்பவும் யாழ்ப்பாணம் போக விருப்பமில்லை. இந்தியாவில் சுதந்திரமாக இருக்கிறதாக சொல்வார். இது உண்மை. தனிப்பட உங்களுக்கு எழுதுகிறேன். நம்பகத்தன்மை பற்றிய உங்கள் கணிப்பு சரியெனச் சொல்ல இதை எழுதுகிறேன். இது அண்ணன் எழுதிய கதை. ஆகவே சாட்சியாயிருக்கும் நான் அமைதியாக கருத்துகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் நுழைந்து கதையை இரசிப்பவர்களை குழப்ப விரும்பவில்லை. "நான் இயக்கத்திட்ட வாங்கின அடியெல்லாம் உங்களுக்குத் தருவன்" என எனக்கும் அம்மாவுக்கும் ஒரே அடி. இவர்கள் எழுதுவதால் எம் வாழ்விலும் இது போல பல சனங்களின் வாழ்விலும் நடந்தவைகள் இல்லெயென்றாகாது. இதிலே அண்ணன் முக்கிய சம்பவங்களை வைத்து கற்பனையை சேர்த்து எழுதினார். நம்பகத்தன்மை பற்றி இன்னும் உறுதியாக நீங்கள் எழுதலாம்.

விமலாதித்த மாமல்லன்

இதை என் தளத்தில் வெளியிட தங்கள் அனுமதி கிடைக்குமா? உங்கள் பெயர் வரவேண்டாம் எனில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஈழத்துப் பெண் என்று வெளியிட விரும்புகிறேன்.

Tharmi Ni

என் பெயரை வெளியிடுவது பற்றி பிரச்சனையில்லை. பெயர் இல்லாமல் வெளியிட இது என்ன இரகசியம். அல்லைப்பிட்டியில் எல்லோருக்கும் தெரிந்த கதை நம் கதை. தனிப்பட்ட ரீதியாக உங்களுக்கு அனுப்பிய மெஸேச் இது என்றும் என் அனுமதியுடன் வெளியிடப்படுகிறதெனவும் நீங்கள் குறிப்பிடலாம். என் அண்ணா ஷோபாசக்தியுடன் இது வெளியான பிறகு நான் இன்னும் கதைக்கவில்லை. அவர் இப்ப இந்தியாவில்.

விமலாதித்த மாமல்லன்

அப்படியெனில் தாங்கள் ஷோபா சக்தியின் உடன்பிறந்த சகோதரியா?

Tharmi Ni

அவர் பிறந்து 6 வருடங்களின் பின் பிறந்தவள்.

Monday, January 2, 2012

Novel Writing Manual By Shobasakthi


கசகறணம் நாவல் தொடர்பாக வல்லினம் இதழில் சோபாசக்தி தெரிவித்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து ஏராளமான உரையாடல்கள் இணைய வெளிகளெங்கும் நடைபெற்றன. வட்டார வழக்கு மொழிப்பாவனை தொடர்பானதே சோபாசக்தியின் கருத்து என்ற கருதுகோள்களுடனேயே வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சோபாசக்தியின் தரப்பில் இருந்து நீண்ட காலமாக பதில்கள் எதுவும் வராத நிலையில், மிக அணமையில் அவ்விடயம் சார்ந்து 'கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்' என்ற பதிவின் மூலம் சோபாசக்தி தனது பக்க விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

சோபாசக்தி இவ்வளவு காலமும் மக்கள் சார்ந்து செயற்பட்டு வருபவர். ஏராளமான புனைவுகளையும், அ-புனைவுகளையும் தமிழ்ச்சூழலுக்கு கொடுத்துள்ளார். கொடுத்துக் கொண்டிருக்கின்றார். தமிழ்ச்சூழலின் தவிர்க்க முடியாத சிந்தனையாளரே சோபாசக்தி என்பதற்கு இப்பதிவு சான்றாகி நிற்கின்றது.

வட்டார வழக்கு, இலக்கியம், நாவல் என்ற பரப்புக்களில் நீண்டகாலமாக அவிழக்கபப்டாமல் இருந்த முடிச்சுக்களை சோபாசக்தி மிக எளிதாக தனது பதிவில் அவிழ்த்துச் செல்கின்றார் சோபாசக்தி. இலக்கிய பிரதிகளில் வட்டார வழக்கின் இடம் எத்தகையது அல்லது வட்டார வழக்கின் ஊடாட்டம் எந்தளவு இடம்பெறலாம் என்பதை மிக எளிதாக வரையறை செய்து செய்வது அற்புதமாக உள்ளது.

முக்கியமான இரண்டு கருத்துக்களைப் பட்டியலிடுகின்றேன்.
* மொழியின் எல்லையற்ற சாத்தியங்களை படைப்பாளி உருவாக்கிக்கொள்ளவும் தனது பிரதியூடே படைப்பாளி புதிய மொழியைக் கண்டறிந்து செல்வதற்கும் வட்டார வழக்கு தடை.
* வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால்.

சோபாவின் இப்பதிவு 'ஒரு நாவலை எப்படி எழுத வேண்டும்?' அல்லது 'ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்?' என்ற புரிதலை பலருக்கும் ஏற்படுத்திவிட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.

சோபாவின் பதிவில் 'வட்டார வழக்கு நாவலில் வரலாம். ஆனால், அதிகமாக வரக்கூடாது.' போன்ற சில முக்கியமான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை விரிவாக்கி எவ்வளவு சதவீதம் வரலாம்? அல்லது நூறு பக்க நாவலுக்குள் எத்தனை சொற்கள் வரலாம் என்பதை மிகச்சரியாகக் குறிப்பிட்டால் எதிர்காலத்தில் நாவல்களை எழுதுவோருக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அப்பதிவை இன்னமும் விரிவாக்கி 'ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்?' என்று எழுதி ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். எதிர்காலத்தில் யாராவது 'Novel Writing Manual' என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டால் ஆங்கில வாசகர்களும் அதனால் பயன் பெறுவார்கள்.

மேலதிக தகவல்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்க்ழகத்தின் வாய்மொழி மூலமான இலக்கியச் செயற்றிட்ட தளத்தைப் பார்வையிடுங்கள்.