தேசியவாதம் சார்ந்த புள்ளிகளில் நடராஜா குருபரனது ஃபேஸ்புக் இல் தெரிவித்த சில கருத்துக்களை இவ்விடத்தில் பகிர்கின்றேன்.
தேசியவாதம் சார்ந்த புள்ளிகளில் உரையாடல்கள் நடைபெற்றதைப் பார்த்தேன். தேசியவாதம் தொடர்பான உரையாடல்கள் மீண்டும் பரந்தளவில் நடைபெற வேண்டும். பின் - நவீன கால சிந்தனைகளின் பின்பான தேசியவாதக் கதையாடல்கள் நிச்சயமாக பழையவற்றின் தொடர்ச்சியாக மாத்திரம் அமையாது. புதிய பாதைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். தலித்திய செயற்பாட்டாளர் anand teltumbde ஈழத்து தமிழ்த்தேசியவாதம் தொடர்பான சில முக்கியமான விடயங்களைக் கூறியிருந்தார். அந்நேர்காணலை எடுக்க முடியவில்லை. இலங்கை தமிழ்த்தேசியவாத்தையும் - தமிழ்நாட்டுத் தமிழ்த்தேசியவாத்தையும் வேறுபடுத்தி அணுக முற்பட்டிருந்தார். ஈழத்து தமிழ்த்தேசியவாத்தின் இருப்பை அவர் கேள்விக்கு உட்படுத்தவில்லை.
பின் - காலனிய நாடுகளின் தேசியவாத அடையாளச் சிக்கல்களை நாம் நிச்சயமாக மேற்கத்தைய அணுகுமுறையில் இருந்து வேறுபடுத்தி அணுக வேண்டியுள்ளது. தேசியவாத அடையாளச் சிக்கல்கள் 'அங்கீகாரம்' மற்றும் 'இறையாண்மை' ஆகிய புள்ளிகளுக்குள் அல்லாடுபவை. பூரணமான அடைவில்லாவிட்டாலும், ஓரளவான அடைவுகளுடன் தேசியவாதச் சிந்தனைகள் ஓய்வுக்கு வந்துவிடும். அவற்றின் ஓய்வு தேசியவாதப் பரப்பிற்குள் வரும் விளிம்புநிலை அடையாள அரசியல்கள் முன்னரங்கிற்கு வருவதை உறுதி செய்யும்.
இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியவாத்தையும் அதன் நியாயத்தையும் ஏற்றுக் கொள்வது அவசியமானது. தமிழ்த்தேசியவாத்தை மாத்திரமல்லாது முஸ்லிம், மலையக தேசியவாதங்களை ஏற்றுக் கொள்வது அவசியமானது. ஏன், சிங்கள தேசியவாத்தையும் கூட ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான தீர்வு சாத்தியாகிய அடுத்த கணம் அடையாள அரசியல்களுக்கான யுகம் வீறுகொண்டெழும். தேசியவாதச் சிந்தனைகள் விளிம்புநிலைக் கதையாடல்களுக்கு மிகப்பெரிய தடையான கணியங்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியமானது. இதர தேசியவாதங்களை மறுத்துக் கொண்டிருப்பது சகல தேசிய இனங்களுக்குள்ளும் ஒடுக்கப்பட்டிருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இரண்டு தேசிய அடையாளச் சிக்கல்களுக்குள் மாட்டுப்பட்டிருக்கும் சமூகங்கள், தங்கள் பரப்பில் உள்ள விளிம்புநிலைச் சமூகங்களை கவனிக்காது - ஏமாற்றும் என்ற உண்மையில் இருந்து நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவில், மொழி ரீதியான மாநிலங்கள் என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமல் போயிருக்குமேயானால், இன்று தலித்திய அரசியல் இவ்வளவு வீரியத்துடன் இருக்காது. தலித்திய புலமைத்துவச் செயற்பாடுகள் ஈழத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பல மடங்கு வீரியமானவை. தமிழ்ச்சூழலின், சாதிய போராட்டங்களுக்கு முன்னோடியான ஈழத்தவர்கள் ஏன் இவ்வளவுதூரம் பின்தங்கியிருக்கின்றோம் என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத தருணமிது. (புலிகள் மீது குற்றம்சாட்டிவிட்டு ஒதுங்குவதில் அர்த்தமில்லை. [ http://www.shaseevanweblog.blogspot.com/2011/12/blog-post_09.html ] ) தொடர்ச்சியான தேசியவாதப் பிண்ணக்குகள் - மேல்தட்டு வர்க்க மக்களும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக சகலரது தலையிலும் மிளகாய் அரைக்கப்போவதையே எதிர்வு கூறுகின்றது.
எனது கருத்தை, அடையாள அரசியல் மீது அக்கறையற்றவர்களது கூற்றாகப் பார்க்க முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். வர்க்கப் புரட்சிக்குப் பின்னர்தான் அடையாள அரசியல் என்றோ அல்லது தமிழீழத்திற்குப் பின்புதான் தலித்தியம் என்றோ கூற வரவில்லை என்பதை திட்டவட்டமாக வலியுறுத்த விரும்புகின்றேன். கற்காலத்தில் இருந்து முதலீட்டிய சமூகத்தின் பிரதிநிதிகளாக செயற்படும் மேறக்த்தைய அரசுகள் என்ற அரசுக்குரிய பாத்திரம்வரையான வளர்ச்சியில் முக்கிய படிநிலைகளை அடையாளம் கண்டுகொள்பவர்கள் - நான் கூற வருவது முற்றுமுழுதாக வேறானது என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
மேலதிக வாசிப்பிற்கு : http://tinyurl.com/6ngvo88
No comments:
Post a Comment