Tuesday, December 6, 2011

ஷோபாசக்தி அடிச்ச ஆட்லரி


சோபாசக்தியின் 'கப்டன்' என்ற சிறுகதை கடந்த காலம் இதழில் பிரசுரமாகி இருந்தது. அதுமட்டுமல்லாது ஃபேஸ்புக் எங்கிலும் பரவலாக பரிமாறப்பட்டும் வருகின்றது.

அது கிடக்கட்டும்.

நம்ம மாமல்லன் அண்ணாச்சி கப்டன் கதை தொடர்பாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அப்பதிவின் பெயர் 'கும்பிடுறேன் ஷோபாசக்தி'. 'கிளாசிக்' என்றும் 'உலகத்தரம்' என்றும் அண்ணாச்சி பாராட்டியதைப் பார்த்து, அண்ணாச்சியே பாராட்டுகின்றாரே என்று கதையை வாசிக்கத் தொடங்கினேன்.

'ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ‘கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் சிறிய வள்ளங்களில் சென்று கோட்டைக்குள் புக முயன்றார்கள். புலிகளின் ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன.' என்றவாறு சோபாசக்தி புனைவெழுதிச் செல்கின்றார்.

புலிகளின் ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக் கொண்டேயிருந்தன என்று என்று சோபாசக்தி அண்ணாச்சி எழுதுவதை வாசிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு நிச்சயமாக எம்.ஜி.ஆர் படங்களில் வரும் கோட்டைக் காட்சிகள் வந்து போயிருக்கும். இன்னும் சிலர் அதென்னது ஆட்லரி என்று மூக்கில் விரலை வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ ஏதோ சுவரில் ஓட்டை போடும் கருவியாக்கும் என்று நினைத்து கதையைத் தொடர்ந்திருப்பார்கள்.

அதென்னய்யா ஆட்லரி?

சோபாசக்தியின் கதை 1990 இல் நடக்கின்றது. அப்போதே ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன என்று எழுதிச் செல்கின்றார் ஷோபாசக்தி. (கவனிக்க ஓட்டைகளைப் போட்டுக்கொண்டிருந்தன அல்ல 'போட்டுக் கொண்டேயிருந்தன'. எஸ். ரா இன் பாதிப்போ?)

1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போதே புலிகளால் இரண்டு ஆட்லரிகள் (நமது வட்டார வழக்கில் கூறப்படும் நெடுந்தூரப் பீரங்கிகள்) கைப்பற்றப்படுகின்றன. அதன் பின்னரே ஆட்லரிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். மட்டுப்படுத்தப்பட்ட கையேடுகளின் உதவியுடன் கேணல் ராஜு ஆட்லரிகள் இயங்குவதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக 'வரலாறு' (7.10) கூறுகின்றது. இவ்விடயத்தை கொஞ்சம் ஊன்றிக் கேட்டால் எனது புனைவில் புலிகளிடம் தொண்ணூறிலேயே ஆட்லரி (அதாவது பீரங்கி) இருந்தது என்று ஷோபாசக்தி கூறுவார் என்பதில் யாருக்கும் சந்தேகமேயிருக்காது, அதுமட்டுமல்லாது தனது அடுத்த புனைவில் ஏவுகணையின் மூலம் புலிகள் 1983 ஆண்டில் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினரைக் கொன்றதைத் தொடர்ந்து இலங்கையெங்கும் கலவரம் பரவியது என்று எழுதி, சகலதையும் கடந்து செல்லும் வல்லமை படைத்தவரல்லவா?

ஈழத்தமிழர்கள் சார்ந்த 'உலக இலக்கியத்தை' சோபாசக்தி படைக்கும் போது இவ்வாறான சிறிய தவறுகளை வாசகர்கள் கண்ண்டு கொள்ளக் கூடாதுதான். ஆயினும், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப எழுதும் போது நிச்சயமாக சில்லறை விடயங்களிலாவது புதினம் காட்ட வேண்டும். என்னதான் சத்தியவான் சாவித்திரி நாடகத்தை 100 தடவை பார்த்த - எம்.ஜி.ஆர் படத்தை 200 தடவை பார்த்த பரம்பரையில் நாம் வந்திருந்தாலும் இப்படிச் செய்யக்கூடாதப்பு.

மா மாமல்லன்

'பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல்' என்ற பதிவை எழுதிய நம்ம மாமல்லன் அல்லைப்பிட்டிக்குப் பக்கத்தில நெடுந்தீவிலோ அல்லது வேலணையிலோ பிறந்திருந்தால், ஷோபாசக்தியின் கதையை வாசித்த கையோடு என்ன பதிவு எழுதியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.

அது இதுதான்.

'ஷோபாசக்தி அடிச்ச ஆட்லரி'

Saturday, May 28, 2011

முன் - இயங்குவெளி

பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக தவறவிடப்படுகின்றன. எழுதப்படாமலேயே போகின்றன. அதற்கான மாற்றீடாக இவ்வலைப்பதிவைத் தொடங்குகின்றேன்.

ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் 'இயங்குவெளி' என்ற வலைப்பதிவை விரிவான எழுத்துக்களுக்காக மட்டுப்படுத்திவிட்டு, குறுகிய காலத்தில் முறையான ஆய்வுகளற்று எழுதப்படும் பதிவுகளையும் ஆங்காங்கே நிகழ்த்தும் உரையாடல்களையும் முக்கியமான நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துவதற்காக இவ்வலைப்பதிவைப் பயன்படுத்தலாம் என நினைக்கின்றேன்.

இயங்குவெளி என்ற வலைப்பதிவில் பிரசுரமாகும் எழுத்துக்களுக்கான முன்னோட்டமாக அமைவதால் இதற்கு 'முன் - இயங்குவெளி' என்று பெயர் சூட்டியுள்ளேன்.