இவ்வாவணத்தை விரிவாக்கி உதவுங்கள். Document, preserve and digitally archive ethnography and knowledge bases such as dialects, belief systems, myths, rituals, folklore, games, indigenous medicine, law and administrative systems, technologies and arts of mainstream and marginalized communities.
இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களது வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தல். சடங்குகளை ஆவணப்படுத்துவதோடு குறித்த சடங்குகளின் தொன்மை, காலப்போக்கில் அவற்றில் நிகழ்ந்த மாற்றங்கள், சடங்குகள் தொடர்பான முதியவர்களின் கருத்துக்கள், சமூகத்தின் கட்டமைப்பு சார்ந்து - அதன் வெவ்வேறு சாதிகளில் குறித்த சடங்குகளில் காணப்படும் வேறுபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இவ்வாவணப்படுத்தல் அமைய வேண்டியுள்ளது. மத வேறுபாடுகள் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கணியமாகும். ஒளி, ஒலி மற்றும் படங்களைக் கொண்டதாக இவ்வாணப்படுத்தல் செயற்பாடுகள் அமையும்.
1. 'இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த மனிதர்களது வாழ்க்கைச் சக்கரத்தில் தொடர்புறும் சடங்குகளை ஆவணப்படுத்தல்.'
வாழ்க்கைச்சகரத்தில் ஒருவர் சந்திக்க நேரும் பல்வேறுபட்ட சடங்குகளை அடையாளம் கண்டு அவற்றை ஆவணப்படுத்தல்.
# பிறப்பு சார்ந்த சடங்குகள் : துடக்குக் கழித்தல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், சோறு தீத்துதல், ஏடு தொடக்குதல்.
# பருவமடைதல் சார்ந்த சடங்குகள்.
# திருமணம் சார்ந்த சடங்குகள் : பெண்பார்த்தல், பொன்னுருக்கு, நாலாஞ்சடங்கு
# இறப்பு சார்ந்த சடங்குகள் : எட்டுச்செலவு, அந்தியேட்டி, ஆட்டுத்திவசம்
2. 'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த கலை வெளிப்பாட்டு பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல்'
உலகமயமாதல் மற்றும் புலப்பெயர்வு - போர் ஆகிய காரணங்களால் தமிழர்களது மரபார்ந்த பல கலைவெளிப்பாடுகள் அழிந்துவருகின்றது. உதாரணமாக கூத்து என்ற தொன்மையான கலை வெளிப்பாட்டைக் குறிப்பிடலாம். கூத்து கலையுடன் தொடர்புபட்ட பலர் இன்று அச்செயற்பாடுகளிலிருந்து வெளியேறுவதையும் - குறித்த கலையுடன் தொடர்புடையவர்கள் , நிகழ்த்து கலைஞர்கள் இறந்து வருவதையும் கண்கூடாகக் காண்கின்றோம். வடக்கு கிழக்கில் பிரதேசம் சார்ந்த வேறுபாட்டுடன் கூத்து நிகழ்த்தப்பட்டது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூத்தை அதன் நிகழ்த்துகையுடன் சேர்த்து - கூத்து கலைஞர்களது பேட்டிகளுடன் அவற்றை முற்றுமுழுதாக ஆவணப்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கூத்து என்ற கலைவெளிப்பாட்டுடன் இதர தமிழர்களது நிகழ்த்துகலை வெளிப்பாடுகளையும் ஒப்பிட்டு நோக்கி ஆவணப்படுத்துவது இச்செயற்றிட்டத்தின் மூலமே முன்னெடுக்க வேண்டிய பணியாகின்றது.
# கூத்து
# நாட்டார் பாடல்கள்
3. 'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களுடன் தொடர்புள்ள சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் ஆவணப்படுத்தல்'
இலங்கையில் உள்ள சமூகங்களைப் பொறுத்தவரை பல்வேறு வித்தியாசங்களையுடைய சமூகக் கட்டமைப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரதேசம் சார்ந்தும் சாதிக்கட்டமைப்பு சார்ந்தும் வழிபாட்டு முறைகள் சிறிய வித்தியாசங்களுடன் வேறுபடுகின்றன. பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நவீனமயமாக்கல் காரணமாக அழிவுற்று வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அவற்றை ஆவணப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.
4. 'இலங்கை தமிழ்பேசும் சமூகங்களுடன் தொடர்புள்ள மருத்துவ அறிவையும் உணவுப் பழக்கவழக்கத்தையும் ஆவணப்படுத்தல்'
மேற்கத்தைய மருத்துவத்தின் காரணமாகவும் நவீனமயமாக்கல் காரணமாகவும் தமிழ்பேசும் சமூகங்கள் தமது மருத்துவ அறிவுத் தொடர்ச்சியையும் உணவுப் பழக்கவழக்கங்களது தனித்துவத்தையும் இழந்து வருகின்றனர். இனத்துவ அறிவுத் தொடர்ச்சி என்ற வகையும் குறித்த சமூகம் நூற்றுக்கணகான வருடங்களாகத் தெரிவு செய்து தொடர்ந்து வந்த அறிவுத்தொடர்ச்சியையும் - அழிந்து கொண்டிருக்கும் அறிவு மற்றும் பழக்கவழக்கங்கள் என்ற வகையில் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. சித்த மருத்துவம், நாட்டு வைத்தியம் போன்றவற்றை, அவற்றுடன் தொடர்புள்ள மருந்துகள் , மூலிகைகளையும் ஆவணப்படுத்துவது இச்செயற்றிட்டத்தின் மூலம் செய்ய வேண்டியது.
5. 'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த தொழிற்கலைகளை ஆவணப்படுத்தல்'
இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த அழிந்துவரும் தொழிற்கலைகளை அடையாளம் கண்டு அவற்றை ஆவணப்படுத்துவது முக்கியமானது. வேளாண்மை, மரம் வெட்டுதல், தச்சு வேலைகள், உலோகப் பாத்திரங்கள் செய்தல், தையல் வேலைப்பாடுகள் போன்றவற்றை அவற்றின் தொன்மைகள் , பழமையான முறைகள் போன்ற தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.
6. 'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த பாரம்பரிய விளையாட்டுக்களை ஆவணப்படுத்தல்'
கபடி, பேணிப்பந்து, பட்டம் ஏற்றுதல், கிளித்தட்டு, கிட்டிப்புல்லு, சொக்கட்டான் போன்ற அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரிய விளையாட்டுக்களை ஆவணப்படுத்துவது தமிழ்பேசும் சமூகங்களது தொன்மையான வாழ்வுத் தொடர்ச்சியை நிறுவுவதற்கான முக்கியமான ஆதாரங்களாகும். மேற்படி விளையாட்டுக்களை அடையாளம் கண்டு அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் கருத்தில் கொண்டு ஆவணப்படுத்த வேண்டிய மிக முக்கிய பணியாக அமைகின்றது.
7. 'இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த பிரதேசங்கள் மற்றும் மனிதர்களது வரலாறுகளை வாய்மொழிமூலமாக ஆவணப்படுத்தல்'
இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் சார்ந்த பிரதேசங்கள் மற்றும் மனிதர்களது வரலாறுகள் வெறும் வாய்மொழிமூலமாகவே கதைகளாகச் சொல்லப்பட்டு வருகின்றது. கதைகளுக்கு ஆதாரமான தகவல் மூலங்களை ஆவணப்படுத்தி முறையான வரலாறுகளை எழுதும் முயற்சிகள் பெரும்பாலும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன. எழுத்துவன்மை உள்ளவர்களால் மாத்திரம் சில கதைகள் புனைவுகளாகவும் அ-புனைவுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நிறைய போதாமைகள் உண்டு. எமது மிக முக்கியமான செயற்பாடுகளாக அமைய வேண்டியது ஏற்கனவேயான போதாமைகளை இனங்கண்டு ஏராளமான தகவல் ஆதாரங்களை பதிவு செய்வதுதான்.