
கசகறணம் நாவல் தொடர்பாக வல்லினம் இதழில் சோபாசக்தி தெரிவித்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து ஏராளமான உரையாடல்கள் இணைய வெளிகளெங்கும் நடைபெற்றன. வட்டார வழக்கு மொழிப்பாவனை தொடர்பானதே சோபாசக்தியின் கருத்து என்ற கருதுகோள்களுடனேயே வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சோபாசக்தியின் தரப்பில் இருந்து நீண்ட காலமாக பதில்கள் எதுவும் வராத நிலையில், மிக அணமையில் அவ்விடயம் சார்ந்து 'கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்' என்ற பதிவின் மூலம் சோபாசக்தி தனது பக்க விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
சோபாசக்தி இவ்வளவு காலமும் மக்கள் சார்ந்து செயற்பட்டு வருபவர். ஏராளமான புனைவுகளையும், அ-புனைவுகளையும் தமிழ்ச்சூழலுக்கு கொடுத்துள்ளார். கொடுத்துக் கொண்டிருக்கின்றார். தமிழ்ச்சூழலின் தவிர்க்க முடியாத சிந்தனையாளரே சோபாசக்தி என்பதற்கு இப்பதிவு சான்றாகி நிற்கின்றது.
வட்டார வழக்கு, இலக்கியம், நாவல் என்ற பரப்புக்களில் நீண்டகாலமாக அவிழக்கபப்டாமல் இருந்த முடிச்சுக்களை சோபாசக்தி மிக எளிதாக தனது பதிவில் அவிழ்த்துச் செல்கின்றார் சோபாசக்தி. இலக்கிய பிரதிகளில் வட்டார வழக்கின் இடம் எத்தகையது அல்லது வட்டார வழக்கின் ஊடாட்டம் எந்தளவு இடம்பெறலாம் என்பதை மிக எளிதாக வரையறை செய்து செய்வது அற்புதமாக உள்ளது.
முக்கியமான இரண்டு கருத்துக்களைப் பட்டியலிடுகின்றேன்.
* மொழியின் எல்லையற்ற சாத்தியங்களை படைப்பாளி உருவாக்கிக்கொள்ளவும் தனது பிரதியூடே படைப்பாளி புதிய மொழியைக் கண்டறிந்து செல்வதற்கும் வட்டார வழக்கு தடை.
* வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால்.
சோபாவின் இப்பதிவு 'ஒரு நாவலை எப்படி எழுத வேண்டும்?' அல்லது 'ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்?' என்ற புரிதலை பலருக்கும் ஏற்படுத்திவிட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.
சோபாவின் பதிவில் 'வட்டார வழக்கு நாவலில் வரலாம். ஆனால், அதிகமாக வரக்கூடாது.' போன்ற சில முக்கியமான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை விரிவாக்கி எவ்வளவு சதவீதம் வரலாம்? அல்லது நூறு பக்க நாவலுக்குள் எத்தனை சொற்கள் வரலாம் என்பதை மிகச்சரியாகக் குறிப்பிட்டால் எதிர்காலத்தில் நாவல்களை எழுதுவோருக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அப்பதிவை இன்னமும் விரிவாக்கி 'ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்?' என்று எழுதி ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். எதிர்காலத்தில் யாராவது 'Novel Writing Manual' என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டால் ஆங்கில வாசகர்களும் அதனால் பயன் பெறுவார்கள்.
மேலதிக தகவல்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்க்ழகத்தின் வாய்மொழி மூலமான இலக்கியச் செயற்றிட்ட தளத்தைப் பார்வையிடுங்கள்.
No comments:
Post a Comment